ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை: அமைச்சர் மூர்த்தி தகவல்

கோவை: பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி  தெரிவித்தார். கோவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டி: தமிழக முதல்வரின் சீரிய முயற்சியில் வணிகர்களிடம் மண்டல வாரியாக, மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ள கூறியுள்ளார். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறோம். 5 வது மண்டல கூட்டம் கோவையில் நடைபெற்றது. அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளோம். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளோம்.

ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி தொடர்பாகவும் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். வணிக வரித்துறையில் நிர்வாக மாற்றம், இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலத்தில் உள்ளவர்கள் பணி மாற்றம், பறக்கும் படை குழுவில் அந்த அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் சோதனை மேற்கொள்ளும் வகையில் மாற்றம் போன்றவைகள் ஏற்படுத்தப்படும். கடந்த கால ஆட்சி எந்த அளவிற்கு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தொழில்துறை பாதிப்புகளை சரிசெய்ய அனைத்து முயற்சிகளையும் தமிழக முதல்வர் எடுத்துள்ளார்.

வணிக வரி, பத்திரப்பதிவு தொடர்பாக புகார்களை பெற கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகிறது. தினமும் 150க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. அதன் மீது சார் பதிவாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் அனைத்து பணிகளும் நடைபெற எளிமையான முறையில் இந்த துறைகளின் இணையதளங்கள் மாற்றி அமைக்கப்படும்.  பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஒன்றிய அரசுடன் பேசி வருகின்றனர். கடந்த காலத்தில் ஆள் மாறாட்டம், போலி பதிவுகள் போன்றவைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: