ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி.20 போட்டி: 56 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

செயின்ட் லூசியா: வெஸ்ட்இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிம்மன்ஸ் 30(21பந்து), ஆண்ட்ரே பிளெட்சர் 9, கிறிஸ் கெய்ல் 13 ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஹெட்மயர் 36 பந்தில், 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன் எடுத்து ரன்அவுட் ஆனார். டுவைன் பிராவோ 34 பந்தில் 47, ரஸ்சல் 8 பந்தில் 24 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், மேத்யூ வேட் டக்அவுட் ஆக கேப்டன் பிஞ்ச் 6 ரன்னில் வெளியேறினார். அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 54(42பந்து) ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். 19.2 ஓவரில் 140 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனது. இதனால் 56 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சில் ஹேடன் வால்ஷ் 3, ஷெல்டன் கோட்ரெல் 2 விக்கெட் வீழ்த்தினர். ஹெட்மயர் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2-0 என தொடரில் வெஸ்ட்இண்டீஸ் முன்னிலை வகிக்க 3வதுடி.20 போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

Related Stories: