இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் திருப்பணி பெயரில் 8.55 லட்சம் நிதி முறைகேடு

* ஆணையரின் உத்தரவை தொடர்ந்து கண்டுபிடிப்பு

* ஊழியர் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை

சென்னை : இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் திருப்பணி பெயரில் 8.55 லட்சம் நிதி வசூல் செய்து முறைகேடு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. சவுகார்பேட்டை பழனியப்பன் தெருவில் அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2012ல் திருப்பணி பெயரில் நிதி வசூலித்து முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து ஆணையர் குமரகுருபரன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.  இந்த விசாரணையில் கோயில் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி வசூல் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.  கடந்த 2012ல் அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராஜபெருமாள் கோயில் திருப்பணி குழு என்கிற பெயரில் அறக்கட்டளை கோயில் முகவரியில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக  கோயிலில் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றிய பொன்னேரியை சேர்ந்த பிரபாகரன் இருந்துள்ளார்.

அறக்கட்டளையில் கோயிலில் பணிபுரியும் அலுவலக உதவியாளர், அர்ச்சகர் உட்பட 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அறக்கட்டளை பெயரில் புதிதாக வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலம் திருப்பணிக்கு நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோயில் வாடகை தாரர்கள் பலரிடம் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கோயில் பெயரில் ரசீது தரப்பட்டுள்ளது. இதன் மூலம் 8.55 லட்சம் வரை வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, கோயில் செயல் அலுவலர் ராதாமணி அளித்த புகாரின் பேரில் யானை கவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்தனர். இந்த நிலையில், பிரபாகரன் மீது ஏற்கனவே கோயில் உண்டியல் பணத்தில் கையாடல்  செய்தது உள்ளிட்ட பல புகார்கள் இருப்பதால் கடந்த 2019ல் சஸ்பெண்ட்  செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை பணி நீக்கம் செய்வது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த 2012ல் அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராஜபெருமாள் கோயில் திருப்பணி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை தொடர்பாக பிரபாகரன் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

ஆனால், ஊழியர்களிடம் கையொப்பம்  வாங்கி கொண்டு, அவர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளார். அறக்கட்டளை தொடர்பாக ஒவ்வொரு வருடமும் கணக்கு தாக்கல் செய்யும் போது, அந்த ஊழியர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டுள்ளார். அவர்களும் சம்பள கணக்கு கோப்பு என நினைத்து கையெழுத்து போட்டுள்ளனர்.இதை பயன்படுத்தி கொண்டு கோயில் அறக்கட்டளை பெயரில் வசூல் செய்து வங்கி கணக்கில் போட்டு வந்துள்ளார். கோயில் முகவரியில் இருப்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த நிலையில் தான் கோயில் செயல் அலுவலர் வாடகை பாக்கி வசூல் செய்யும் போது தான் அவர்கள் மூலமாக இந்த உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது. அதன்பிறகு நடந்த விசாரணையில் கோயில் பெயரில் இது போன்ற மோசடி நடந்து இருப்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது’ என்றார்.

Related Stories: