தமிழர்கள் அதிகம் குடியிருக்கும் தங்கவயல் பஸ் நிலையத்தில் தமிழ் பெயர் பலகை அழிப்பு: வாட்டாள் நாகராஜ் கைது

தங்கவயல்:  கர்நாடகா மாநிலம், தங்கவயல் பஸ் நிலையத்தில் நேற்று, கன்னடத்தை  காப்போம்’ என்ற போராட்டம், கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடந்தது. கட்சி தொண்டர்களுடன் நகரசபை பஸ் நிலையம் வந்த  வாட்டாள் நாகராஜ், அங்கிருந்த போலீஸ் டி.எஸ்.பி. உமேஷிடம், ``பஸ் நிலைய  பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்துக்களை அழிக்க வந்துள்ளேன்’’ என்றார்.  அதற்கு டி.எஸ்.பி. நகரசபை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, அவர்களுக்கு  அவகாசம் தந்தால் அவர்களே நீக்கி விடுவார்கள் என்றார். அதை ஏற்க மறுத்த  வாட்டாள் நாகராஜ், பஸ் நிலைய முகப்பு வாயிலில் மேலே ஏறி தமிழ் எழுத்துக்களை  அழிக்க அறிவுறுத்தினார். உடனே வளைவின் மேலே ஏறிய கட்சி தொண்டர்கள் தமிழில்  எழுதி இருந்ததை அழித்தனர்.

 அப்போது அங்கு கூடியிருந்த  தலித் ரக்‌ஷன  வேதிகே தலைவர் கலை அன்பரசன் தலைமையில் கூடிய தமிழார்வலர்கள் எதிர்ப்பு  குரல் எழுப்பினர். ``மொழி வாரி மாநில பிரிவினைக்கு முன்பிருந்தே இங்கே  தமிழர்கள் வாழ்ந்து வருகிறோம். மாநில சிறுபான்மை மொழி இன மக்களுக்கு உள்ள  சட்ட உரிமைகளின் படி, மாநில மொழி கன்னடம் அடுத்து ஆங்கிலம் மூன்றாவதாக தான்  தமிழ் எழுதப்பட்டுள்ளது. நகரசபை மீண்டும் தமிழ் பெயர் பலகை  அமைக்காவிட்டால் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்’’ என்றனர். இதையடுத்து, வாட்டாள் நாகராஜை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Related Stories: