இந்தியா - இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 13க்கு பதில் ஜூலை 18ம் தேதி தொடங்கும்: பிசிசிஐ அறிவிப்பு

கொழும்பு: இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 13க்கு பதில் ஜூலை 18ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இலங்கை அணி வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தேதி மாற்றப்பட்டுள்ளதாக ஜெய்ஷா தகவல் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. வரும் 13-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதேபோல், அந்த அணியின் உதவி ஊழியர் ஜி.டி.நிரோஷன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து, இந்தியா - இலங்கை இடையேயான போட்டி அட்டவணை மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், 17-ம் தேதி நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் ஒருநாள் போட்டி 18-ம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி 20-ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 23-ம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் முறையே 25, 27, 29 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இலங்கை அணியின் மாற்று வீரர்கள் (alternate squad) பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இந்திய அணியுடன் மோதும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வை தொடர்ந்து இந்தியா-இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories: