உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது?: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகையில் ஒற்றை தலைமை அண்ணா ஓ.பி.எஸ். என தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு பிறகு முதல்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் நடத்தப்படாமல் இருக்கக்கூடிய 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிபெற எவ்வித ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது. அதேபோல கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் முக்கிய பிரச்சனையாக பார்க்கக்கூடியது சசிகலா ஆடியோ விவகாரம் தான்.

குறிப்பாக தினந்தோறும் சசிகலா, அதிமுக தொண்டர்களிடம் பேசி வருவதும், அதன்பிறகு கட்சி தலைமை அந்த தொண்டனை கட்சியில் இருந்து நீக்குவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சசிகலாவின் ஆடியோ விவகாரம் தொடர்பாக அடுத்தகட்டமாக எவ்வித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. சட்டமன்ற தேர்தலில் தோல்வி தழுவியது குறித்து தற்போது அதிமுக - பாஜக நிர்வாகிகள் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். இதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Related Stories: