வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட 144 கிலோ வெள்ளி, 32 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!!

வேலூர்: வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்புள்ள 144 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் 32 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து காட்பாடி வழியாக தமிழகத்திற்கு கஞ்சா, ரேஷன் அரிசி உள்ளிட்டவை சட்டவிரோதமாக ரயில்கள் மூலம் கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுப்பதற்காக அவ்வப்போது காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இருந்து கேரளாவின் கொல்லத்திற்கு செல்லும் எக்பிரஸ் ரயில், காட்பாடி ரயில் நிலையம் வந்த போது, ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அச்சமயம் சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி 144 கிலோ வெள்ளி கட்டி மற்றும் நகைகள், 32 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வெள்ளி மற்றும் பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அவற்றை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆவணங்கள் இன்றி இவற்றை கொண்டு வந்த சதீஷ், பிரகாஷ், சுரேஷ், நித்யானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த நகை வியாபாரிகள் என கூறியுள்ளனர். ஆனால் அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால் நகைகளை கடத்தி சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: