அதிமுக ஆட்சியில் ரூ.3 கோடியில் முறையாக தூர் வாராத கவுசிகா ஆறு-கழிவுநீர் ஓடையான அவலம்

விருதுநகர் : விருதுநகர் வழி செல்லும் கவுசிகா ஆற்றை தூர்வார ரூ.3 கோடி ஒதுக்கியும், முறையாக தூர்வாராததால் முட்புதர் மண்டி கிடக்கிறது. இந்த ஆற்றை, முழுமையாக தூர்வாரி தடுப்பாணைகள் கட்ட வேண்டுமென விருதுநகர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மதுரை மாவட்டத்தின் காட்டுப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடமலைக்குறிச்சி கண்மாய் நிறைந்து, கவுசிகா ஆறாக உருவெடுத்து விருதுநகர் வழியாக ஓடுகிறது. இந்த ஆற்றில் குல்லூர் சந்தை அணை நிறைந்து வெளியேறி கோல்வார்பட்டி அணைக்கும் அங்கிருந்து கடலில் கலக்கிறது. கவுசிகா ஆற்றை தூர்வாரி புனரமைப்பு செய்ய அதிமுக ஆட்சியில் 2015ல் ரூ. 3கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தூர்வாரும் பணியை முறையாக செய்யாமல் முட்களை மட்டும் மேலோட்டமாக அகற்றி விட்டு தூர் வாரியாதாக பணம் எடுத்தை எடுத்து விட்டனர்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் கவுசிகா ஆறு முழுமையாக கருவேல் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. மேலும், விருதுநகர் நகராட்சியில் பாதாளச்சாக்கடை திட்டம் 2007ம் ஆண்டு துவங்கி இன்று வரை முழுமை பெறாத நிலையில் நகரின் கழிவுநீர், கவுசிகா ஆற்றில் கலக்கிறது. மேலும் விருதுநகரை சுற்றிய ஊராட்சிகளாக சிவஞானபுரம், பாவாலி, கூரைக்குண்டு, ரோசல்பட்டி ஊராட்சிகளின் கழிவுநீரும் கவுசிகா ஆற்றில் கலப்பதால் கழிவுநீர் ஓடும் ஓடையாக காட்சி தருகிறது.

அத்துடன் கவுசிகா ஆற்றோரப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நகராட்சி பகுதியில் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை முழுமையாக தடுக்கவும், ஊராட்சிகளின் கழிவுநீரை நகராட்சி சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்து, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும் கவுசிகா ஆற்றை முழுமையாக தூர் வாரி, இரு தடுப்பணைகள் கட்டினால் விருதுநகரின் நிலத்தடி நீர் மட்டம் உயரும், தண்ணீர் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைக்கும் என விருதுநகர் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: