தேவையான அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாக 16ம் தேதி ஒன்றிய அரசுடன் ஆலோசனை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்

மதுரை: மதுரை மாவட்டம், அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டக்குழுவை உருவாக்கவும், உடனடியாக தற்காலிக வெளிநோயாளிகள் பிரிவை உருவாக்கவும், எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ‘‘மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிக்கு ரூ.15 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியது. மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளில் மாநில அரசுக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை. விரைவாக கட்டுமானப்பணிகள் முடிந்து, உரிய ஒப்புதலுடன் விரைவாக மாணவர் சேர்க்ைக நடக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளோம்.150 மாணவர்களுடன் மாணவர் சேர்க்கையை துவக்குவது தொடர்பாக ஒன்றிய  அரசின் தரப்பில் 3 தற்காலிக ஏற்பாடுகள் கேட்டுக் ெகாள்ளப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச திட்டம் தொடர்பாக வரும் 16ம் தேதி ஒன்றிய -மாநில அரசுகளின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. ஒன்றிய  அரசு கேட்டதும் தேவையான இடம் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் எம்பிபிஎஸ் வகுப்புகள் துவக்கம் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு துவக்கம் குறித்து பேசப்படும். மதுரை எய்ம்ஸ் முழுமையாகவும், விரைவாகவும் செயல்பட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நோக்கம். இதற்கு தேவையான அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும். இந்த விவகாரம் குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஒன்றிய  அமைச்சரை ஜூலை 9ம் தேதி (நாளை) சந்தித்து பேசுகிறார்’’ என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாணவர் சேர்க்கை மற்றும் புற நோயாளிகள் பிரிவு துவக்கம் குறித்த அறிக்கையை, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 26க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: