வாட்ஸ் அப்பில் ‘ஹாய்’ மெசேஜால் வந்த வில்லங்கம்; கேரள பெண்ணின் வலையில் சிக்கிய கர்நாடக இளைஞர்: ரூ30 லட்சத்தை பறிகொடுத்த பரிதாபம்

மங்களூரு: வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட கேரள பெண்ணிடம் நட்பு கொண்ட கர்நாடக இளைஞர், பணம் பறிக்கும் கும்பலால் ரூ. 30 லட்சத்தை பறிகொடுத்தார்.  கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, கேரள மாநிலம் பந்த்வாலைச் சேர்ந்த தனீஷா ராஜ் என்ற இளம்பெண், கர்நாடகா மாநிலம் முதானூரைச் சேர்ந்த அப்துல் நசீர் என்ற இளைஞருக்கு வாட்ஸ்அப்பில் ‘ஹாய்’ செய்தி அனுப்பினார். அதன் தொடர்ச்சியாக அடிக்கடி பல்வேறு தகவல்கள், ஆபாச படங்களை அனுப்பி உள்ளார். இதனால், இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. பின்னர், வீடியோ கால் மூலம் இருவரும் பேசிக் கொண்டனர். ஒரு நாள் இருவரும் நேரில் சந்திக்க விரும்பினர்.

அதன்படி, குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, குறிப்பிட்ட இடத்திற்கு அப்துல் நசீர் வந்தார். பின்னர் தனீஷா ராஜூடன் சேர்ந்து அவர்களது நண்பர்களான கோட்டையத்தைச் சேர்ந்த கட்டப்புனி முகமது ஷாஃபி, அட்டிக்கேரைச் சேர்ந்த அசார், சவனூரை சேர்ந்த அசார், நாசிர் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள், அப்துல் நசீரிடம் ரூ .30 லட்சம் கோரினர். அதிர்ச்சியடைந்த அவர், ‘எதற்காக ரூ. 30 லட்சம்’ என்று கேட்ட போது, ‘பணம் கொடுக்காவிட்டால் தனீஷாவுடன் வீடியோ காலில் பேசியது, ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி விடுவோம்’ என்று மிரட்டினார்.

அதிர்ச்சியடைந்த அவர், தனக்கு அவமானம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், ரூ .30 லட்சத்தை இரண்டு தவணையாக உரிய சாட்சிகளை வைத்துக் கொண்டு கொடுத்தார். பின்னர், அதனை கொண்டு புத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து  போலீஸ் டிஎஸ்பி குமாரின் தலைமையிலான போலீசார், கேரளாவை சேர்ந்த முதல் குற்றவாளியான தனீஷா ராஜ், முகமது ஷாஃபி, அசார், நசீர் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து ரூ .7.5 லட்சம் மீட்கப்பட்டது. மீதமுள்ள தொகையை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். இவ்விவகாரத்தில், மேலும் இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: