10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு கூட புதிதாக திட்டம் தொடங்கவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரிய மண்டலஆய்வு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு கூட புதிதாக திட்டம் தொடங்கவில்லை. ரூ.1.59 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வட்டி செலுத்தி வருகிறது.

குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யவேண்டிய சூழல் இருந்தும், அதிக விலைக்கு கொள்முதல் செய்தனர். இதனால் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதனை இழப்பு என்று சொல்லமாட்டேன். ஊழல் என்று குற்றம்சாட்டுகிறேன். கடந்த ஆட்சியில் விஷன்-2023 என்ற திட்டத்திற்கு 15 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. அதில் மின்வாரியத்திற்கு மட்டும் 4.50 லட்சம் கோடியில், நீங்கள் மின்வாரியத்திற்கு பயன்படுத்திய நிதி அளவு, என்ன திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்று கேட்டேன். எதையும் செயல்படுத்தவில்லை. வட்டிக்கு வாங்கி வட்டி கட்டியுள்ளனர். எந்த இடங்களிலும் புதிய திட்டங்களை கடந்த அரசு செய்யவில்லை.  இவ்வாறு அவர் பேசினார்.

* மின் ஆளுமைக்கு விருது

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘தமிழக முதலமைச்சரிடம் அனுமதிபெற்று, மின்வாரியத்தில் மின்ஆளுமைக்கான விருது வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்வாரியத்தில் உதவிபொறியாளர், கோட்ட பொறியாளர், எஸ்இ, சிஇ போன்ற பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மின் ஆளுமைக்கான விருது வழங்கப்படும்’ என்றார்.

Related Stories: