ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொழில் படுத்துவிட்டதால் ‘செக்ஸ்’ தொழிலாளர்கள் பிரதமர் மாளிகையை முற்றுகை: பாலியல் தொழிலில் 10% வருவாய் இழந்து தவிக்கும் தாய்லாந்து

பாங்காக்: ஊரடங்கு கட்டுபாடுகளை வாபஸ் பெறக்கோரி தாய்லாந்து பிரதமர் மாளிகையின் முன் பாலியல் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாலியல் தொழில் 10%  அளவிற்கு உள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகமே முடங்கி கிடந்தாலும் கூட, பொழுதுபோக்குத் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொழுதுபோக்கு துறையின் ஒரு பிரிவாக தாய்லாந்து நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் (செக்ஸ் ஒர்க்கர்ஸ்) நிலைமை, அடுத்தடுத்த ஊரடங்கால் அவர்களின் தொழில்  படுத்துவிட்டது.

அதனால், ஊரடங்கை வாபஸ் பெறக்கோரியும், கட்டுப்பாடுகளை செக்ஸ் தொழிலாளர்கள் மீது விதிக்கக் கூடாது எனக்கோரி தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரதமர் மற்றும் அமைச்சர்களின் அதிகாரபூர்வ மாளிகை முன் விரக்தியுடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அப்போது அவர்கள், தங்களது உள்ளாடைகளை பிரதமர் அலுவலக வாயில்களின் முன் போட்டு கோஷங்களை எழுப்பினர். மேலும், செக்ஸ் தொழிலாளர்களின் அடையாளங்களில் ஒன்றான ‘ஹை ஹீல்ஸ்’ காலணிகளை பிரதமர் மாளிகை முன் வைத்தும், கண்டன அட்டைகளை கையில் ஏந்தியும், ‘பிரா’, ‘பிகினி’ போன்ற உள்ளாடைகளை அணிந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அவர்களில் சிலர் தங்கள் வழக்கமான ஆடைகளுக்கு மேல், பிகினி ஆடைகளை கவசங்களை போன்று அணிந்திருந்தனர். தொற்றுநோய் பரவல் மற்றும் கட்டுப்பாடுகளால் வேலையின்றி இருப்பதையும், அதனால் ஏற்பட்டுள்ள நிதி சிக்கல்களை அடையாளப்படுத்தும் வகையில், ‘பணம் இல்லை; ஹனி இல்லை; மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இல்லை’ என்ற பதாகைகளை காட்டினர். தாய்லாந்து நாட்டில் கொரோனா காலத்திற்கு முன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பாலியல் தொழில் மூலம் 10 சதவீதம் அளவிற்கு அதன் பங்களிப்பு இருந்ததாக மதிப்பிடப்பட்டது. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில், தாய்லாந்து நாட்டின் செக்ஸ் தொழிலாளர்களின் பங்கு மிக அதிகம்.

பில்லியன் கணக்கான டாலர் வருவாயை ஈட்டித் தருவதால், தலைநகரில் உள்ள செக்ஸ் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை அனுப்பி வருகின்றனர். இப்போது நிலைமை மோசமானதால், கோ-கோ பார்கள், மசாஜ் பார்லர்கள், ஜென்டில்மேன் கிளப்புகள், கரோக்கி மையங்கள் போன்றவை மூடப்பட்டு கிடக்கின்றன. இங்கெல்லாம் கொரோனாவுக்கு முன்பு பாலியல் தொழில் அமோகமாக நடக்கும். தற்போது, அவ்வாறு ஏதேனும் பாலியல் தொழிலில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி தண்டனைக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது 1,250 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியாகிலும் தங்களது தொழிலை மேம்படுத்தியாக வேண்டும் என்பதற்காக, ஆன்லைனில் தங்கள் பாலியல் சேவைகளை ‘புக்’ செய்தாலும் கூட, அதனையும் போலீசார் கண்காணித்து பிடித்துவிடுகின்றனர். அதனால், பாலியல் தொழிலாளர்கள் எந்தவகையிலும், வருவாயை ஈட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாலியல் தொழிலாளர் சிறிசாக் சைட்டட் கூறுகையில், ‘ஊரடங்கு கட்டுபாடுகளால் எங்களது தொழில் முழுவதுமாக படுத்துவிட்டது.

அதனால், எங்களுக்கு மாதம் 156 அமெரிக்க டாலர் நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும். தாய்லாந்தில் மற்ற தொழிலாளர்களை போன்றே, பாலியல் தொழிலாளர்கள் நடத்தப்படுவார்கள். ஆனால், மற்றவர்களுக்கு நிதி உதவி வழங்குவது போல் எங்களுக்கு வழங்கவில்லை. நாங்களும் நாட்டிற்கு வருமானத்தை ஈட்டித்தருவதில் முக்கிய பங்காற்றுகிறோம். எங்கள் உடலை மூலதனமாக வைத்து தொழில் செய்கிறோம். ஆனால், அரசாங்கம் எங்களை மனிதர்களாகக் கூட பார்ப்பதில்லை’ என்றார். பாலியல் தொழிலாளர்கள் மற்றுமின்றி, பார்கள் நடத்துவோர், உணவக உரிமையாளர்கள் ஊரடங்கு கட்டுபாடுகளை மீறுவோம் என்று பகிங்கரமாக அறிவித்துள்ளனர்.

உணவகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய அரசின் சார்பில் சில உதவிகள் செய்தாலும் கூட, கொரோனா பிரச்னையில் இருந்து இன்னும் நாடு இயல்பு நிலைக்கு திரும்பாததால், பாலியல் தொழில் உட்பட பொழுதுபோக்கு துறை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதனால், இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த பிரச்னைகள் நீடிக்கும் என்று கவலையுடன் மக்கள் உள்ளனர்.

Related Stories: