மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜ அமளி ஆளுநர் பாதியில் வெளியேறினார்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜ எம்எல்ஏ.க்கள் செய்த அமளியால், ஆளுநர் தனது உரையை பாதியில் நிறுத்தி விட்டு வௌியேறினார். மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள், கடந்த மே மாதம் 2ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து, இம்மாநிலத்தில் பாஜ.வினர் மீது திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தினர். இதில், பலர் கொல்லப்பட்டனர். இதனால், மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதேபோல், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக ஆளுநர் ஜெகதீப் தங்காரும் ஒன்றிய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். இதனால், அவருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஜெகதீப் தங்கார் தனது உரையை வாசிக்க தொடங்கியதுமே, மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி பாஜ எம்எல்ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால், ஆளுநர் தனது உரையை 10 நிமிடங்கள் கூட தொடர முடியாமல், பாதியிலேயே முடித்து கொண்டு புறப்பட்டார்.இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

* சொலிசிட்டர் ஜெனரலை நீக்கும்படி மோடிக்கு கடிதம்

பிரதமர் மோடிக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி.க்கள் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘நாரதா மற்றும் சாரதா நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜ.வின் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி, நாட்டின் மிக உயர்ந்த 2வது சட்ட அதிகாரியான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை டெல்லியில் சந்தித்து பேசியது முறையற்றது. இந்த வழக்குகளில்  சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வருகிறார். எனவே, துஷார் மேத்தாவை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: