நடிகர் தியாகராஜ பாகவதர் பேரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கினார்

சென்னை: பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகைக் குடியிருப்பு மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதனை வழங்கினார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:  முதல்வர் மு.க.ஸ்டாலின் பழம்பெரும் நடிகரும், கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு வீடு ஒன்றினையும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவைச் செயல்படுத்தும்விதமாக, நேற்று தலைமைச் செயலகத்தில், தியாகராஜ பாகவதர் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், அவரது குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பிற்கான ஆணையினையும், ரூ.5 லட்சம் நிதியுதவியினையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: