பாகிஸ்தான் தலைநகரில் செயல்படும் இந்திய தூதரகத்தை தகர்க்க சதியா? அலுவலகம் மீது வட்டமிட்ட மர்ம டிரோன்

புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது டிரோன் பறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவில் உள்ள விமானப்படை தளம் மீது கடந்த மாதம் 27ம் தேதி தீவிரவாதிகள் டிரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்தியாவில் டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் சம்பவம். இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இந்த சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களாக ஜம்முவில் பல இடங்களில் சர்ச்சைக்குரிய வகையில் டிரோன்கள் பறக்க விடப்படுகின்றன. இதன் மூலம், டிரோன்கள் மூலமாக தீவிரவாதிகள் பெரிய அளவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் மீது டிரோன் பறந்த சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. ஜம்முவில் தாக்குதல் நடத்தப்பட்ட கடந்த வாரம், இஸ்லாமாபாத் இந்திய தூதரக வளாகத்தின் மீதும் மர்மமான முறையில் டிரோன் பறந்துள்ளது. இந்த விவகாரம் நேற்றுதான் வெளியானது. இது குறித்து அதிகாரப்பூர்வ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், தூதரகம் மீது டிரோன் பறந்தது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அப்பட்டமான பாதுகாப்பு விதிமீறல் என கண்டித்துள்ள இந்திய அரசு, இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் கவலை கொண்டிருப்பதாகவும், இது குறித்து பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளது. ஜம்முவில் டிரோன்களை பறக்க விட்டு ஆட்டம் காட்டும் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தை தகர்க்க நோட்டமிட்டு  இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது. பாக். மறுப்பு: இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. இது எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு என அந்நாட்டு வெளியுறவுத்துறை கூறி உள்ளது.

* நேற்றும் ஊடுருவிய டிரோன்

ஜம்முவின் புறநகரான ஆர்னியா செக்டார் பகுதியில், சர்வதேச எல்லைக்கோடு அருகே எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அதிகாலை 4.25 மணி அளவில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று பறந்து வந்தது. இந்திய எல்லைக்குள் கடக்க முயன்ற அதன் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். உடனே, அது பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பிச் சென்றது. இது, பாகிஸ்தானின் கண்காணிப்பு டிரோனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எல்லைப் பகுதியை நோட்டம் விடுவதற்காக இந்த டிரோன் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

* லஷ்கர் இ தொய்பா வேலைதான்

ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பக் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஜம்மு விமானப்படை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்த முடிவும் எட்டவில்லை. முந்தைய வரலாறுகளை வைத்து பார்க்கும் போது, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்தான் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்களை ஜம்முவில் கொண்டு வர டிரோன்களை பயன்படுத்துவார்கள். எனவே, டிரோன் பின்னணியில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அல்லது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு சம்மந்தப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது’’ என்றார்.

* 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவாட்டம், ஹன்ஜன் கிராமத்தின் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

Related Stories: