நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட விரும்பவில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘நீதித்துறைக்கு என தனியாக அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது,’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.  ஒன்றிய, மாநில அரசுகளின் பட்ஜெட்டில் நீதித் துறைக்கு போதிய நிதியை ஒதுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, ரீபக் கன்சல் என்ற  வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர்  தனது மனுவில், ‘ஒன்றிய, மாநில அரசுகளின் பட்ஜெட்டில் நீதித்துறைக்கு தனியாக அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நிதியை நிர்வகிக்க, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுடன் இணைக்கப்பட்ட தனி செயலகமும் அமைக்கப்பட வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.

நீதிமன்றங்கள் நிதி தேவைக்காக முழுவதும் ஒன்றிய, மாநில அரசுகளை மட்டுமே சார்ந்துள்ளன. இது, நீதிமன்றங்கள் அதன் தீர்ப்புகளை அறிவிக்கும் போது பாரபட்சத்தை காட்ட வழிவகுக்கும். எனவே, நீதித்துறைக்கு நிதி ஒதுக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,’ என கூறியிருந்தார். தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. பின்னர், தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “நீதித்துறைக்கு என்று அதிக நிதி ஒதுக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது. அது, அரசின் கொள்கை சார்ந்தவை. அதில், நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. அதனால், மனுதாரரின் மனுவில் விசாரணைக்கான முகாந்திரம் இல்லாததால், வழக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என அறிவித்தார்.

Related Stories: