அதிநவீன இயந்திரம் மூலம் கொளத்தூர் ஏரியில் தூர்வாரும் பணி தீவிரம்

பெரம்பூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் உள்ள நீர்நிலைகளை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தொகுதியில் தூர்ந்து கிடக்கும் நீர்நிலைகள், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும்படி திருவிக நகர் மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கொளத்தூர் 200 அடி சாலையில் உள்ள கொளத்தூர் ஏரி வடிகால்வாயை தூர்வார அதிகாரிகள் முடிவு செய்தனர். ஏரி கால்வாயில் குப்பைகளும் சில்ட் மணல் எனப்படும் மண் குவியல்களும் அதிகளவில் காணப்பட்டன.

இதையடுத்து, திருவிக நகர் மண்டல அதிகாரி பரந்தாமன் அறிவுறுத்தல்படி செயல் பொறியாளர் செந்தில் நாதன், உதவி செயற்பொறியாளர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர், கடந்த 3 நாட்களாக ரோபோட்டிக் மெஷின் மற்றும் மினி அம்பீசன் மிஷின் உள்ளிட்ட அதிநவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரி சுத்தம் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக 7 லாரிக்கும் அதிகமான குப்பை மற்றும் சில்ட் மண் அகற்றப்பட்டுள்ளது. கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதால் கொளத்தூர் ஏரிக்கு வரும் மழைநீர், பி.கேணால் வழியாக தங்குதடையின்றி வெளியேறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: