தமிழக அரசு மாற்று இடம் ஒதுக்கினால் மதுரை எய்ம்சில் மாணவர் சேர்க்கை வெளிநோயாளிகள் பிரிவு துவக்க தயார்: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு தகவல்

மதுரை: மதுரை மாவட்டம், அதலையைச் சேரந்த புஷ்பவனம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டக் குழுவை உருவாக்கவும், உடனடியாக தற்காலிக வெளிநோயாளிகள் பிரிவை உருவாக்கவும், எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலரின் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘‘தோப்பூர் தேர்வு செய்யப்பட்ட பிறகு கடந்த 17.12.2018ல் ரூ.1,264 கோடியில் பணிகள் துவக்க அனுமதிக்கப்பட்டது.

ஆனால், திட்ட மதிப்பீடு ரூ.1977.8 கோடியாக உயர்ந்தது. ஜப்பான் ஜிகா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மதுரை எய்ம்சிற்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு துவக்குவதற்கான சரியான மாற்று இடம், ஆசிரியர்கள் மற்றும் இதர மனித வளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தயாராக உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுடன் விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செயல் இயக்குநர், துணை இயக்குநர், செயற்பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் சுகாதாரம் தொடர்பான திட்டங்களில் நல்ல முன்னேற்றம் உள்ளது’’ என அதில் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசின் மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘இதுதொடர்பாக ஒன்றிய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு எந்தவிதமான கோரிக்கையும் இதுவரை வரவில்லை. எங்களிடம் கேட்டால், தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர தயாராக உள்ளோம்’’ என்றார். இதனையடுத்து நீதிபதிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை துவங்குவதற்கான தற்காலிக இடம் தேர்வு செய்வது குறித்து, ஒன்றிய, மாநில அரசுகளின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 7க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: