அதிமுகவுக்கும் அந்தம்மாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை சசிகலா ஆயிரம் பேரிடம் பேசினாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஓமலூர்: சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால் அவர், ஆயிரம் பேரிடம் போனில் பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தை அடுத்த ஓமலூரில் அதிமுக ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:  திமுக சார்பில் தேர்தல் நேரத்தில் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் சிலவற்றை மட்டுமே தற்போது நிறைவேற்றி உள்ளனர். பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னதை நிறைவேற்ற வேண்டும்.

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் குறைந்த விலைக்கு வழங்கப்பட்ட அம்மா சிமென்ட் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. எனவே எந்த அளவு தடுப்பூசி உள்ளது? அது எத்தனை பேருக்கு போடப்படும் என்பதை முன்கூட்டியே அறிவித்து டோக்கன் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மற்ற மாநிலங்களைப் போல், நாமும் நீட் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். எனவே அரசு சார்பில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

 சசிகலா அதிமுகவில் இல்லை. இதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். ஊடகங்களும், பத்திரிகைகளும் இதை பெரிது படுத்துகிறார்கள். அந்தம்மா எனக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார். அதிமுகவுக்கும் அந்த அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் அதிமுக உறுப்பினர் கிடையாது. அதனால் அவர் பத்து பேரிடம் மட்டுமல்ல, ஆயிரம் பேரிடம் போனில் பேசினாலும் அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. கடந்த காலத்தில் மின்சாரம் வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு.

ஆனால் அதிக கட்டணம் கொடுத்து பொதுமக்களுக்கு வாங்கி விநியோகித்தோம். இது தொடர்பான செலவு கணக்குகளை மறைக்க முடியாது. பீக் ஹவர் எனப்படும் காலை 6 முதல் இரவு 10மணிவரை மாணவர்கள் படிப்பு உள்ளிட்டவற்றுக்கு மின்சாரத்தின் தேவை மிகவும் முக்கியம். அந்த நேரத்திற்கான மின்சாரத்தையே அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளோம். தோராயமாக ரூ.14.26 கொடுத்து மின்சாரம் வாங்கினோம். அதில் அந்த நிறுவனத்திற்கு செல்வது வெறும் 56 பைசா மட்டும் தான். மீதி தொகை ஆயில் நிறுவனங்களுக்கு செல்கிறது.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

* ஜெயலலிதா வீட்டில் வேலை செய்தவர்தான் சசிகலா: சி.வி.சண்முகம்

விழுப்புரத்தில் அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி: டிடிவி தினகரனை ஜெயிக்க வைக்க வக்கில்லை. இவங்க, வந்து  அதிமுகவிற்கு வரப்போறாங்களா?.  சசிகலா என்பவர் யார்?. அம்மா வீட்டில் வேலை  செய்து வந்த உதவியாளர். அம்மாவும் இல்லை, அதோடு அவர் வேலையும்  முடிந்துவிட்டது என்றார்.

Related Stories: