மக்கள் தரும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு மனித உரிமையை மதிக்க காவலர்களுக்கு பயிற்சி: புதிய டிஜிபி சைலேந்திரபாபு உறுதி

சென்னை: பொதுமக்கள் தரக்கூடிய மனுக்கள் மீது 30 நாட்களில் விசாரித்து தீர்வு காணப்படும் என்று புதிதாக தமிழக காவல் துறை டிஜிபியாக பதவியேற்றுக்கொண்ட சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 30வது டிஜிபியாக சைலேந்திர பாபுவை தமிழக அரசு நியமித்தது. அதைத்தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தார். அப்போது அவருக்கு பாரம்பரிய முறைப்படி டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிறகு முன்னாள் டிஜிபி திரிபாதி தனது பொறுப்புகள் அனைத்தையும் முறைப்படி புதியதாக பதவியேற்றுக்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஒப்படைத்தார். பிறகு டிஜிபி சைலேந்திரபாபு சரியாக 11.30 மணிக்கு டிஜிபி இருக்கையில் அமர்ந்து கையெழுத்திட்டு தனது பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். காவல் துறை டிஜிபி பதவியில் இருந்து நேற்று ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி திரிபாதி மற்றும் அவரது மனைவிக்கு, டிஜிபி சைலேந்திர பாபு மலர் கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தார். முன்னாள் டிஜிபி திரிபாதி தனது மனைவியுடன் காரில் அமர்ந்த உடன் காவல் துறை அதிகாரிகள் காரின் மீது மலர்கள் தூவியும், கயிறு கட்டி காரை டிஜிபி வளாகத்தில் இருந்து சாலை வரை இழுத்துவந்தும் பிரியா விடை கொடுத்தனர்.

அதைதொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது: டிஜிபியாக பொறுப்பேற்கும் அரிய வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு எனது நன்றி. காவல் துறையை பொறுத்தமட்டில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தரக்கூடிய மனுக்கள் குறிப்பாக ‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ மூலம் அளிக்கப்படும் மனுக்கள் 30 நாட்களில் விசாரித்து அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும். காவலர்கள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். காவலர்களின் குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இலக்குகளை எட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: