36 ஆண்டுகள் மனநிறைவுடன் பணியாற்றி ஓய்வுபெறுகிறேன் தமிழகமே எனது தாய் வீடு: பணி நிறைவு விழாவில் முன்னாள் டிஜிபி திரிபாதி உருக்கம்

சென்னை: தமிழகமே தாய் வீடு என பணி நிறைவு விழாவில் முன்னாள் டிஜிபி திரிபாதி உருக்கமாக பேசினார். தமிழக காவல் துறை இயக்குநராக பணியாற்றி நேற்று ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு தமிழக காவல் துறை சார்பில் பணி நிறைவு விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. டிஜிபி திரிபாதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இதில் கலந்து கொண்டார். அவருக்கு காவல் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். டிஜிபி சைலேந்திர பாபு அவருக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். காவல் துறை நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி ரவி, டிஜிபி திரிபாதிக்கு நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் காவல் துறை செயலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி பேசியதாவது: 1985ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து, தமிழக பணி ஒதுக்கப்பட்டு, 36 ஆண்டுகளாக நான் பல பொறுப்புகளில் தமிழக காவல்துறையில் பணியாற்றியுள்ளேன். எனது காவல் பணியை இன்று சிறப்புற நிறைவு செய்ய வழிவகை செய்து கொடுத்த முதலமைச்சருக்கு என் சார்பிலும், எனது குடும்பத்தாரின் சார்பிலும் தாழ்மையான வணக்கங்களையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடிசா மாநிலத்தில் பிறந்து, புதுதில்லியில் எனது படிப்பினை மேற்கொண்டு 1985ம் ஆண்டு தமிழகத்திற்கு பணி நிமித்தமாக வந்த எனக்கு, இன்று தமிழகமே எனது தாய் வீடு என்ற அளவில் எனது குடும்பமும், பிள்ளைகளும் இங்கேயே வளர்ந்து, இங்கேயே பல பணிகளில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நான் தொடந்து தமிழகத்திலேயே இருந்து என்னால் முடிந்த பணிகளை காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து செய்வேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: