10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்: மகன், தந்தை அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை..! சட்டீஸ்கரில் சோகம்

பிலாஸ்பூர்: சட்டீஸ்கரில் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட தகராறில், இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசுப்பள்ளியில் அலுவலக உதவியாளராக ஜெய் பிரகாஷ் (44) பணியாற்றி வந்தார். இவரது மகன் நிஷாந்த் (16) விசாகப்பட்டினத்தில் 10ம் வகுப்பு படிப்புக்கான தேர்வு எழுதியிருந்தார். கடந்தாண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இருவரும் தங்களது சொந்த ஊரான சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு வந்தனர். இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்விற்கான மதிப்பெண் சான்றிதழை, ஆந்திராவில் இருந்து அவரது தந்தை எடுத்து வராததால், இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு இதேபோல் தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தந்தை, தனது மகன் நிஷாந்தை திட்டியதால் மனமுடைந்த அவன், வீட்டின் ஒரு அறைக்குள் புகுந்து, தனது தாயின் புடவையின் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் நிஷாந்த் வெளியே வராததால், அறையின் உள்ளே சென்று பார்த்த போது, நிஷாந்த் தூக்கில் சடலமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த தந்தை, தனது மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய நிஷாந்தின் சடலத்தை கீழே இறக்கிவைத்தனர். பின்னர், நடந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தில் தெரிவிப்பதற்காக நிஷாந்தின் சகோதரி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இதற்கிடையே, மகன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில், ஜெய் பிரகாஷூம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து நிஷாந்தின் சகோதரி வீட்டிற்குள் வந்து பார்த்த போது, தனது தந்தை தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதற்குள் அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்துவிட்டனர். அடுத்தடுத்து மகனும், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிர்கிட்டி போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories: