தமாகா தலைமை நிலைய செயலாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

சென்னை:  காங்கிரசில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், தமாகா என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு, கட்சியின் முக்கிய தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர். தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமாகா 6 தொகுதிகளில் போட்டியிட்டது.  ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் கட்சியின் மூத்த தலைவராக இருந்த கோவை தங்கத்துக்கு வெற்றி வாய்ப்புள்ள வால்பாறை தொகுதியை கேட்டு பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கோவை தங்கம் தமாகாவில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

 அவரை தொடர்ந்து, மாநில பொதுச் செயலாளராக இருந்த ரயில்வே ஞானசேகரன் உள்பட பலர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இதை தொடர்ந்து,  கொட்டிவாக்கம் முருகன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் விக்டரி மோகன் ஆகியோரும் தமாகாவில் இருந்து விலகினர்.  இந்நிலையில், தமாகா தலைமை நிலைய செயலாளர் டி.எம்.பிரபாகரன் தமாகாவில் இருந்து விலகி, அதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.

Related Stories: