கொரோனா பாதித்த எல்லா மாணவருக்கும் சிஏ தேர்வில் விலக்கு

புதுடெல்லி: கொரோனா பாதித்தவர்கள், சமீபத்தில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் அனைவருக்கும் சிஏ தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டய கணக்காளர் எனப்படும் சிஏ தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூலை 5ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வழிகாட்டு நெறிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் கான்வீல்கர், தினேஷ் மகேஸ்வரி, அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதிகள், கொரோனா பாதித்த மாணவர்கள் தேர்விலிருந்து விலகிக் கொள்ள அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்திற்கு (ஐசிஏஐ) உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, ஏற்கனவே கொரோனா பாசிடிவ் சான்றிதழ் வழங்கிய மாணவர்களுக்கு மட்டுமே தேர்விலிருந்து விலக்கு அளிப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனாவால் பாதித்த, சமீபத்தில் தொற்றிலிருந்து குணமடைந்த மற்றும் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக ஐசிஏஐ தெரிவித்தது. மேலும், சில காரணங்களால் வேறு நகரத்தில் தேர்வு மையம் போடப்பட்ட மாணவர்களும் தேர்வு எழுதாமல் விலக சலுகை வழங்கப்பட்டு இருப்பதாக கூறியது. இந்த வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

Related Stories: