வேலூர் தோட்டப்பாளையத்தில் குடிநீர் டேங்க் இடித்துவிட்டு கடை வைத்து ஆக்கிரமிப்பு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் : வேலூரில் குடிநீர் டேங்கை இடித்துவிட்டு ஆக்கிரமித்து கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.வேலூர் மாநகராட்சி 26வது வார்டுக்கு உட்பட்ட தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பெரிய தெருவில் இரு கடைகளுக்கு இடையே மாநகராட்சிக்கு சொந்தமான சின்டெக்ஸ் குடிநீர் டேங்க் இயங்கி வந்தது. அந்த டேங்கை மர்ம நபர்கள் தரைமட்டமாகி உள்ளனர்.

அந்த இடத்தையும், சாலையும் ஆக்கிரமித்து புதிதாக கடையை அமைத்துள்ளனர். ஏற்கனவே சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்து உள்ளதால் வாகனங்கள் சென்று வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தட்டிக்கேட்டால் புதிதாக கடை வைத்துள்ளவர்கள் அந்த பகுதி மக்களை மிரட்டுகிறார்களாம்.

இந்த பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் நேரத்தில் கடையின் வெளியே நின்று கொண்டு புகைபிடித்தல், கேலி, கிண்டல் செய்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் தொல்லை கொடுத்து வருகிறார்கள். எனவே உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடையை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: