யுபிஎஸ்சி தலைவருடன் தமிழக அதிகாரிகள் ஆலோசனை தமிழகத்தின் 30வது புதிய டிஜிபி யார்? இன்று அல்லது நாளை தெரியும்

புதுடெல்லி: தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்வது குறித்து, டெல்லியில் யுபிஎஸ்சி தலைருடன் தமிழக தலைமை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து புதிய டிஜிபி யார் என்பது குறித்து இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து மாநில நலனை அடிப்படையாக கொண்டு அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் திரிபாதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த டி.கே.ராஜேந்திரனின் பணிக்காலம் முடிவடைந்த போது கடந்த 2019ம் ஆண்டு சட்ட ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதியை அப்போதைய எடப்பாடி பழனிசாமியின் அரசு நியமித்தது.

தமிழகத்தின் 29வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து நாளையோடு இவரது பதவிக்காலம் முடிவடைக்கிறது.  இதையடுத்து இந்த பதவிக்கு பணி மூப்பு அடிப்படையில் சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், கந்தசாமி உள்ளிட்ட 11 பேர் பட்டியல் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதில் 5 பேரை தேர்வு செய்து தமிழக அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. வழக்கமாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 3 பேர் ெகாண்ட பட்டியல்தான் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தமிழக காவல்துறையின் சிறப்பு சட்டப்படி 5 பேரை மத்திய அரசிடம் கேட்டு வாங்கி, அதில் இருந்து ஒருவரை டிஜிபியாக தேர்வு செய்யலாம்.

  இந்த நிலையில் புதிய டிஜிபி தேர்வு செய்வதற்காக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் விமானம் மூலம் டெல்லி சென்றனர். சாணக்கியாபுரியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர்கள் நேற்று காலை 12 மணிக்கு யுபிஎஸ்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். யுபிஎஸ்சியின் தலைவர் பிரதீப் குமார் ஜோஷி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணைய மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளும், தமிழக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.   இதையடுத்து நடத்தப்பட்ட ஆலோசனையில், 11 பேர் பட்டியலில் ராஜேஷ்தாஸ் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையால் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் அவர் பெயர் நிராகரிக்கப்பட்டது.

சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் ஏடிஜிபிக்களாக இருப்பதால் அவர்களது பெயர்களும் நிராகரிக்கப்பட்டன. மீதம் உள்ள 8 பேர் பட்டியல் பரிசீலிக்கப்பட்டது. அதில், மூத்த அதிகாரிகளான பிரதீப்.வி.பிலிப், எம்.கே.ஜா இருவரும் ஆறு மாதத்தில் ஓய்வுபெறுகின்றனர். இதனால் அவர்களது பெயர்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.  கடைசியாக சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில்குமார் சிங், கந்தசாமி, பி.கே. ரவி ஆகிய 6 பேர் பட்டியல் பரிசீலிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த கூட்டம் பிற்பகல் 2மணிக்கு முடிவடைந்தது. அப்போது அவர்களிடம் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை ஒன்றிய அரசின் அதிகாரிகள் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

அதில் மத்திய அரசு கூறியபடி 3 பெயர்கள் இடம்பெற்றுள்ளதா, தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி 5 பெயர் இடம் பெற்றுள்ளதா என்ற விபரம் தெரியவில்லை. 3 பெயர் என்றால், சைலேந்திரபாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகியோரது பெயர் இடம்பெற்றிருக்கும். சஞ்சய் அரோரா மத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இதனால் சைலேந்திரபாபு அல்லது கரன்சின்ஹா ஆகியோரில் ஒருவர் டிஜிபியாக அறிவிக்கப்படுவார்கள். அந்தப் பட்டியலில் 5 பெயர் என்றால், கூடுதலாக சுனில்குமார் சிங், கந்தசாமி ஆகியோரது பெயர் இடம்பெற்றிருக்கும். அப்படி என்றால் சுனில்குமார் சிங், அதிமுக அரசுக்கு வேண்டியவர். அதிமுக ஆட்சியில் சேலம் கமிஷனராக இருந்தவர்.

அங்கு அதிகாரிகளுக்காக குளிர்சாதன உடற் பயிற்சி கூடம் நடத்தும், காண்ட்ராக்டர் அருண் என்பவர் மூலம் கூட்டுறவு பிரமுகரைப் பிடித்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, சிறைத்துறை பதவியை பிடித்தவர். இதனால் அவருக்கு வாய்ப்புகள் குறைவு. நேர்மையான அதிகாரி கந்தசாமிதான் மீதம் உள்ளார்.  இதனால் சைலேந்திரபாபு, கரன் சின்ஹா, கந்தசாமி ஆகியோரில் ஒருவர் டிஜிபியாக வாய்ப்புகள் உள்ளன.   இதற்கிடையில், கூட்டம் முடிந்த பிறகு தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று, பின்னர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசு கொடுத்த பட்டியலை வைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இன்று அல்லது நாளை புதிய டிஜிபியை தமிழக அரசு அறிவிக்கும்.

பட்டியலை ஏற்பது கட்டாயமில்லை

ஒன்றிய அரசு கொடுக்கும் 3 அல்லது 5 பேர் பட்டியலை அப்படியே ஏற்று அதில்  இருந்துதான் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கடந்த  அதிமுக ஆட்சியின்போது உளவுத்துறை டிஜிபியாக இருந்த ராமானுஜம், ஒன்றரை  ஆண்டுகள், சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை கூடுதலாக கவனித்து வந்தார்.  அதன்பின்னர்தான் ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று அவரை சட்டம் ஒழுங்கு  டிஜிபியாக நியமித்தனர். அதேபோல, உளவுத்துறை டிஜிபியாக இருந்த அசோக்குமாரும்  6 மாதங்களுக்கு மேல் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை கூடுதலாக கவனித்து  வந்தார். அதன்பின்னர்தான் அவரும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று டிஜிபியாக  நியமிக்கப்பட்டார். இரு அதிகாரிகளும் இரு பதவிகளையும் கவனித்து வந்தனர்.  இதனால், மத்திய அரசு தேர்வு செய்த பட்டியலை அப்படியே ஏற்க வேண்டியதில்லை.  தமிழக அரசுக்கு வேண்டிய அல்லது நியாயமானவர் என்று கருதும் போலீஸ் அதிகாரியை  நியமிக்கலாம். அவர் ஏற்கனவே பார்க்கும் துறையுடன் சட்டம்-ஒழுங்கு  பதவியையும் சேர்த்து பணியாற்ற உத்தரவிடலாம் என்று உள்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

Related Stories: