அணுசக்தி மையங்களின் படங்களை ஐ.நா.விடம் தர முடியாது - ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் உறுதி

தெஹ்ரான்: அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்நிலையில் தெஹ்ரானுக்கு தெற்கே போர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில், 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது.

இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது. இந்த நிலையில் ஜோ பிடன் தலைமையிலான புதிய நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முனைப்பு காட்டி வருகிறது. இந்தச் சூழலில் ஈரானில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றி பெற்றார். இதற்கிடையே, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தாவிட்டால் தங்களது அணுசக்தி மையங்களுக்குள் ஐ.ஏ.இ.ஏ. பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு செய்தித் தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் கலிபாஃப் கூறுகையில், அணுசக்தி மையங்களின் உள்ளே எடுக்கப்படும் படங்களை ஐ.ஏ.இ.ஏ.,வுடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே இனி அத்தகைய படங்களை அந்த அமைப்பிடம் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: