கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள்

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் குறித்து பொதுமக்களிடம் வீணான குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த மாநிலத்திலும் அறிவிக்கப்படாத சிறப்புத் திட்டத்தினை தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக அறிவித்தார். கொரோனா நோய்த் தொற்றால் இரண்டு பெற்றோர்களையும் இழந்த மற்றும் தாயையோ அல்லது தந்தையையோ இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலன் காப்பதற்காக சென்ற 29.5.2021 அன்று அறிவித்த இந்தத் திட்டத்தினை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்த்தது.  

இவ்வளவு மகத்தான மக்கள் நலத் திட்டத்தை 16.6.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்து, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் பயன்களையும் வழங்கியிருக்கிறார். அதே நேரத்தில், ஆதரவற்ற குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு, இன்று வரை இரண்டு பெற்றோர்களையும் இழந்த பிரிவில் 92 குழந்தைகளும், பெற்றோரில் ஒருவரை இழந்த பிரிவில் 3,409 குழந்தைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இத்திட்டத்தைப் பொறுத்தவரை 18 வயதிற்கு உட்பட்டவர்களே குழந்தைகள் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புத் திட்டத்தின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் அனைத்து கொரோனாவில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளைக் காப்பாற்றி, கை தூக்கிவிட வேண்டும் என்று கருணை உள்ளத்தில் உருவான திட்டம் என்பதை மறந்து, முதலமைச்சரின் சீரிய சிந்தனையில் உருவான இந்த சிறப்புமிகு திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தவறான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் வீணான குழப்பதை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: