அமீர் அர்ஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒரு குற்றவாளி கைது: பரபரப்பு வாக்குமூலம்

சென்னை:  சென்னை வடபழனி,  கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி ஆகிய பகுதிகளில் உள்ள  எஸ்பிஐ வங்கி ஏடிஎம் டெபாசிட் மையங்களில் சென்சாரை மறைத்து ஒரு கொள்ளை கும்பல் 70 லட்சம் கொள்ளையடித்தது. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம்,  எஸ்பிஐ வங்கியின் தலைமை பொதுமேலாளர்  ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார்.  இதையடுத்து, சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் என்.கண்ணன்  தலைமையில் தனிப்படை போலீசார், சிசிடிவி, வங்கி அதிகாரிகள் அளித்த ஆவணம் மற்றும் பிற மாநில போலீசாரிடம் இருந்து சேகரித்த தகவலை வைத்து இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. அமைக்கப்பட்டு, ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்ய  போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போதுதான் இது அரியானா மாநிலத்தை சேர்ந்த கும்பலின் கைவரிசை என்றும் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் 25 ஏடிஎம்களில்  சுமார் 70 லட்சத்துக்கும் நூதன முறையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார்,  அரியானா மாநிலம், மேவாக் மாவட்டத்தை சேர்ந்த அமீர் அர்ஷ் என்பவரை  கைது செய்தனர். இந்நிலையில், பூந்தமல்லி நீதிமன்றம், அமீர் அர்ஷை 5 நாள் போலீஸ்  காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அப்போது, அவன் பல திடுக்கிடும் தகவல்களை கூறி உள்ளான். இதுகுறித்து கொள்ளையன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: ஏடிஎம்களில்  கொள்ளையடிக்க பயிற்சி கொடுத்து தமிழகத்துக்கு அனுப்பினர்.  

சென்னையில் ராமாபுரம், சின்மயா நகர், பாண்டி பஜார், வடபழனி, வேளச்சேரி,  தரமணி ஆகிய 6 இடங்களில் அமீர் அர்ஷ், அவரது நண்பர் வீரேந்தருடன் வந்து  எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் உள்ள சிடிஎம் இயந்திரங்களில் பணத்தை கொள்ளையடித்தனர். அந்த இடங்களுக்கு கொள்ளையன் அமீர் அர்ஷை அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளோம். பணம் எடுப்பது எப்படி என்பதை நடித்து காட்டினார். பெரியமேடு, கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட  இடங்களில் தங்கள் ஊரை சேர்ந்த வேறு இருவர் கைவரிசை காட்டியதாக அமீர்  தெரிவித்துள்ளார். இவ்வாறு கொள்ளையன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில்,  அமீர் அர்ஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கூட்டாளி வீரேந்தரை  மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார்  நேற்று அரியானாவில் கைது  செய்தனர்.

இதையடுத்து அவரை சென்னை அழைத்து வரும் பணியில் போலீசார் தீவிரமாக  உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்படும் போது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்  வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Related Stories: