எச்.ராஜாவை கண்டித்து நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா சிவகங்கை மாவட்ட பாஜ கூடாரம் காலியாகிறது: தேர்தல் செலவுக்கு வழங்கிய பல கோடி முறைகேடு புகார்

காரைக்குடி: பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா. சர்ச்சை பேச்சுகள் மூலம் பிரபலமானவர். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் 3 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார்.  இதையடுத்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் தோல்வியை சந்தித்தார். இதனால் விரக்தியில் உள்ள எச்.ராஜா, தனது தேர்தல் தோல்விக்கு மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள்தான் காரணம் என குற்றம்சாட்டியும், சிலரை மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எச்.ராஜாவின் நடவடிக்கையைக் கண்டித்து காரைக்குடி நகர பாஜ தலைவர் சந்திரன் 2 நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆட்டோ பாலா, கண்ணங்குடி, தேவகோட்டை, திருப்புவனம் நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் மாவட்ட தலைவர் செல்வராஜ் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. நிர்வாகிகளின் தொடர் ராஜினாமாவால் சிவகங்கை மாவட்ட பாஜ கூடாரமே காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பாஜ நிர்வாகிகள் கூறுகையில், ‘‘எச்.ராஜா தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை சுய பரிசோதனை செய்யாமல், தனது தவறை மறைக்க எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார். தேர்தல் செலவுக்கு கட்சி வழங்கிய பணத்தில் பல கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து தலைமைக்கு தெரிவித்துள்ளோம்’’ என்றனர்.

Related Stories: