சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட்: பர்ஸ்ட் லுக் வெளியானது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் படத்தின் பர்ஸ்ட் லுக் டிரெண்டிங் ஆனது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய் ஜோடியாக முதல்முறையாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தளபதி 65 என இந்த படம் துவங்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கொரோனா லாக்டவுன் தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில் விஜய்க்கு இன்று பிறந்த நாள். இதை முன்னிட்டு நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. படத்துக்கு பீஸ்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக்கில் மெகா துப்பாக்கியுடன் விஜய் தோன்றுகிறார். விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் தலைப்பும் வெளியானதால் ரசிகர்கள் பெரிதும் உற்சாகம் அடைந்தனர். டிவிட்டரில் பீஸ்ட் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. சமூக வலைத்தளங்களில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வைரலானது. விஜய்யின் பிறந்த நாள் மகிழ்ச்சியுடன் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியானதால் இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடி வருவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

சர்கார் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் என்பதால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கியுள்ளார். அவர் இயக்கும் மூன்றாவது படம்தான் இது.

Related Stories: