டோக்கியோவில் பிரம்மிக்க வைக்கும் 'ஒலிம்பிக் கிராமம்'!: 11,000 வீரர்களுக்காக 23 அடுக்குமாடி குடியிருப்புகள் சகல வசதிகளுடன் ஏற்பாடு..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக கட்டமைக்கப்பட்ட ஒலிம்பிக் கிராமம் பலரையும் வியக்க செய்கிறது. 44 ஹெக்டேர் பரப்பளவு, 23 அடுக்குமாடி குடியிருப்புகள் இத்யாதி இத்யாதி என அனைத்து வசதிகளும் இங்கு ஒருங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக எந்தவொரு பெரிய அளவிலான போட்டியாக இருந்தாலும் விளையாட்டு கிராமம் அமைக்க வேண்டியது கட்டாயம். இது வேறு ஒன்றும் இல்லை. 

வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்ளிட்டோர் சகல வசதிகளுடன் ஆங்காங்கே அலையாமல் குறிப்பிட்ட ஓர் இடத்தில் தங்குவதற்காக கட்டமைக்கப்படும் பிரத்யேக வளாகம் தான் இந்த விளையாட்டு கிராமம். இது போட்டிகள் ஒட்டி பெயர்கள் மாறுபடும். சென்னையில் 1995ல் தெற்கு ஆசிய விளையாட்டு போட்டு நடத்தப்பட்ட போது எஸ்.ஏ.எப்.எம்ஸ் வில்லேஜ் கோயம்பேட்டில் உருவாக்கப்பட்டது. 

அதுபோல தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கை ஒட்டி அங்கு டோக்கியோ விளையாட்டு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. 23 அடுக்குமாடி குடியிருப்புகள், வீரர், வீராங்கனைகள் உட்பட சுமார் 18,000 பேர் தங்குவதற்கான அறைகள், பயிற்சி மையங்கள், ஜிம், 4,500 பேர் அமர்ந்து உணவருந்த கூடிய மெகா டைனிங் ஹால், ஷாப்பிங் பிளாசாக்கள், மருத்துவமனை,மால்கள், போஸ்ட் ஆபிஸ், வங்கி, கொரியர் சேவை, டிரை கிளைநர், ஏ.டி.எம்., தனி வாகனங்கள் என இல்லாத வசதிகளே இங்கில்லை. 

இவை அனைத்தும் 44 ஹெக்டேர் பரப்பளவில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பு குழு வடிவமைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 1 மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், போட்டியை நடத்த நாங்கள் தயார் என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது போட்டி அமைப்பு குழு. ஒலிம்பிக் என்றாலே பிரம்மாண்டம் தான். 

விளையாட்டு வலிமையை பறைசாற்ற ஒவ்வொரு நாட்டுக்கும் கிடைத்த அறிய வாய்ப்பு இந்த ஒலிம்பிக் போட்டி. இந்த கௌரவமிக்க திருவிழாவை 1964ம் ஆண்டுக்கு பிறகு ஜப்பான் தற்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் 23ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 8ம் தேதி வரை இந்த கோலாகலத்தை அரங்கேற்றவுள்ளது. 

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டியை மீண்டும் நடத்துவதற்கு ஜப்பானிலேயே எதிர்ப்பு குரல்கள் ஓங்கி ஒலித்து வரும் நிலையிலும் திட்டமிட்டவாறு போட்டி நடத்தும் ஜப்பான் அரசின் நடவடிக்கையை விளையாட்டு ஆர்வலர்கள் வரவேற்காமல் இருக்க முடியாது. 

Related Stories: