பொதுப்பணித்துறையில் பேக்கேஜ் டெண்டருக்கு தடை: முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை; அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை:  பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய கட்டிடத்தில் நடந்தது. அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் செயலாளர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், தலைமை பொறியாளர்கள் ரவிச்சந்திரன், ரகுநாதன், இணை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் கல்யாண சுந்தரம் மற்றும் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒப்பந்ததாரர்கள் சார்பில், இரும்பு, செங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், பேக்கேஜ் டெண்டர் முறையை ஒழிக்க வேண்டும், கட்டுமானம், எலக்ட்ரிக்கல் பணிக்கு தனித்தனியாக டெண்டர் விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கூட்டத்துக்குப் பின் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: பல்வேறு ஒப்பந்ததாரர்கள் இருக்கிற குறைகளை களைந்தால், கட்டிட பணிகளை விரைந்து முடிக்கலாம் என்று பல கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக, ஒப்பந்த முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வைத்தனர். கட்டிட பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய கிராவல், ஜல்லி, மணல் கட்டுமான பொருட்களை வாங்க தூரமாக செல்ல வேண்டியுள்ளது. அவற்றை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு தர வேண்டும். இப்போது இருக்கின்ற பேக்கேஜ் டெண்டர் முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமான பொருட்களின் விலை ஆண்டுக்கு 3 முதல் 4 முறை விலை உயருகிறது. கட்டிடம் கட்டும் போது ஒரு விலையாகவும், முடிக்கும் போது ஒரு விலையாகவும் உள்ளது. இந்த விலையேற்றத்தால் ஒப்பந்தம் போட்ட உரிய தொகையை பெறுகிற போது பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர். ஒரு கட்டிடத்துக்கு முக்கியமாக பணியாற்றுவது எலக்ட்ரிக்கல் வேலை. அதை தனியாக டெண்டர் விட வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். இதையெல்லாம் செயலாளர், முதன்மை தலைமை பொறியாளருடன் ஆலோசித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று எவையெல்லாம் ஒப்பந்ததாரர்களுக்கு மாற்றி அமைக்க முடியும். எவை நியாயமான கோரிக்கையோ அதை முதல்வரிடம் தெரிவிப்போம். அவர் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடுவார். இந்த அரசு அனைத்து பணிகளையும் செயல்படுத்துவதில் ஒளிவுமறைவற்ற தன்மையை கடைபிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: