மகளிர் டெஸ்ட் டிரா செய்தது இந்தியா

பிரிஸ்டல்: இங்கிலாந்து மகளிர் அணியுடனான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி  கடுமையாகப் போராடி டிரா செய்தது. பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 396 ரன்னும், இந்தியா 231 ரன்னும் எடுத்தன. இந்திய அணியில் அறிமுக தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 96 ரன், ஸ்மிரிதி மந்தனா 78 ரன் விளாசினர். 165 ரன் பின்தங்கிய நிலையில், பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 3ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன் எடுத்திருந்தது. ஷபாலி 55 ரன், தீப்தி ஷர்மா 18 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ஷபாலி 63 ரன் (83 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி எக்லெஸ்டோன் பந்துவீச்சில் பிரன்ட் வசம் பிடிபட்டார். தீப்தி 54, பூனம் ராவுத் 39 ரன் எடுக்க, கேப்டன் மித்தாலி 4 ரன்னிலும், ஹர்மான்பிரீத் கவுர் 8 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றமளித்தனர். பூஜா 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இன்னிங்ஸ் தோல்வி இக்கட்டில் இருந்து மீண்டாலும், இந்தியா 199 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஸ்நேஹ் ராணா - ஷிகா பாண்டே ஜோடி 8வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 41 ரன் சேர்த்தது. ஷிகா 18 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா105 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன் எடுத்திருந்தது. ஸ்நேஹ் ராணா 59 ரன், டானியா பாட்டியா 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இப்போட்டி டிராவில் முடிந்தது.

Related Stories: