வன்முறையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க தயாராகிறது அரியானா

புதுடெல்லி:  அரியானாவின் திக்ரி எல்லையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து, கடந்த 7 மாதங்களாக விவசாய சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 30ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். மேலும், அரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் 40 வயது நபர்  நேற்று முன்தினம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் இறந்தார். திக்ரி போராட்டத்தில் பங்கேற்ற 4 பேர் அவரை கொளுத்தியதாக, இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி  உள்ளனர்.  இந்நிலையில், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரும், இம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜும் நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். அப்போது, விவசாயிகள் போராட்டத்தில் நடக்கும் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்த கட்டார், போராட்டத்தை ஒடுக்க அனுமதி அளிக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், கட்டார் அளித்த பேட்டியில், ‘‘விவசாயிகள் போராட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது கவலை அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு மோசமடைய அரியானா அரசு அனுமதிக்காது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்,” என்றார்.  ஆனால், இந்த குற்றச்சாட்டை விவசாய சங்கங்கள் மறுத்துள்ளன.

Related Stories: