அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணி நடைபெறாததால் மழைக்கு ஒழுகும் அரசபட்டி பஞ்சாயத்து அலுவலகம்

திருமங்கலம்: அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணி நடைபெறாததால் கள்ளிக்குடி அருகே அரசபட்டி பஞ்சாயத்து அலுவலகம் சிதைவடைந்து மழைக்கு ஒழுகி வருகிறது. இதனால் பணிகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்டது டி.அரசபட்டி கிராமம். இந்த கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சரிவர பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யாததால் தற்போது பஞ்சாயத்து அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்காலங்களில் அலுவலகத்தின் பெரும்பாலான பகுதியில் ஒழுகுவதால் ஆவணங்களை பராமரிப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பஞ்சாயத்து கூட்டங்கள் நடத்த கூட அலுவலத்தில் சரிவர இடம் இல்லாமல் பஞ்சாயத்து நிர்வாகம் திணறி வருகிறது.

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் சுந்தரபாண்டியிடம் கேட்டபோது, ‘நான் கடந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகியுள்ளேன். இந்த அலுவலகம் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. நாங்கள் பதவியேற்றதும் சிதைவடைந்து காணப்படும் பஞ்சாயத்து அலுவலகம் குறித்து கள்ளிக்குடி ஒன்றிய அதிகாரிகளிடம், பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளேன். சேதமடைந்துள்ள கட்டிடம் என்பதால் தலைவர் என்ற முறையில் எனது பெயர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பெயர்களை கூட பஞ்சாயத்து அலுவலகத்தில் எழுத முடியவில்லை. பராமரிப்பு பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்’ என்றார்.

Related Stories: