அதிமுகவிற்கு தலைமையேற்க சசிகலாவுக்கு அழைப்பு: நெல்லையில் பரபரப்பு போஸ்டர்கள்

நெல்லை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி இல்லாத நிலையில் ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், இபிஎஸ் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர். எனினும் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் மானூர் பகுதியில் ஓபிஎஸ்சிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சசிகலாவும் நெல்லை மாவட்ட தொண்டர்களோடு அவ்வப்போது செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று நெல்லை மாநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதிகளில் சசிகலாவை அதிமுகவிற்கு தலைமையேற்க அழைப்பு விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

வைகுண்டம் நகர முன்னாள் அதிமுக பொறுப்பாளரும், வக்கீல் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவருமான துரைராஜ் என்பவர் பாளை பகுதிகளில் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அதில் ‘‘தாயே வா, தலைமையேற்க வா, தள்ளாடும் கழகத்தை தலைநிமிர்த்த வா, தொண்டர்களின் துயர் துடைக்க வா’ என அதிமுக தலைமை பொறுப்பை ஏற்க சசிகலாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் மத்தியில் இத்தகைய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Stories:

>