கீழடி, கொற்கை, மாளிகைமேடு பகுதிகளில் அகழாய்வு பணி மீண்டும் துவங்கியது

ஜெயங்கொண்டம்: தமிழக தொல்லியல் துறை மூலம் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் அருகில் அமைந்துள்ள மாளிகைமேடு  பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட ஆய்வு பணிகள் தொடங்கியது. இங்கு பழங்கால பானை, ஓட்டு வில்லைகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள் மற்றும் செப்புக்காசுகள் கண்டெடுக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.  

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கீழடி, கொற்கை போன்ற இடங்களில் அகழாய்வு பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது. அந்த வரிசையில் மாளிகைமேடு பகுதியிலும், அகழாய்வு பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது.  குறைந்தபட்ச தொழிலாளர்களை கொண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அகழாய்வு பணிகள் நடைபெறுவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: