கொரோனா நிதிக்கு முதலமைச்சரிடம் சங்கிலி கொடுத்த இளம் பெண்ணுக்கு பணி நியமன ஆணை!: அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று வழங்கினார்..!!

சேலம்: மேட்டூர் அணையை திறக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதிக்கு தனது இரண்டு சவரன் தங்க சங்கிலியை கொடுத்த பொட்டனேரியை சேர்ந்த சௌமியா என்ற இளம்பெண்ணுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் வழங்கினார். பி.இ. கம்பியூட்டர் சயின்ஸ் படித்து முடித்துள்ள மாணவி சௌமியாவுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி பொட்டனேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தில் பணி நியமனத்துக்கான ஆணையை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். 

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு மாணவி சௌமியாவுக்கு வாழ்த்து கூறினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சௌமியா, ஓரிரு நாட்களிலேயே நடவடிக்கை எடுத்து பணி நியமன ஆணை வழங்கியது தமக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் உறுதி அளித்தபடி தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணையை வழங்கியதாக கூறியுள்ளார். 

மாதம் 17,500 ரூபாய் ஊதியத்தில் சௌமியாவுக்கு வேலை அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை திறப்புக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ம் தேதி சென்ற போது பொட்டனேரியில் சாலையோரம் நின்றிருந்த மாணவி சௌமியா, படிப்புக்கு ஏற்ற வேலை வழங்கக்கோரி மனு ஒன்றை கொடுத்தார். மேலும் மனுவுடன் சேர்த்து கவரில் தனது 2 சவரன் சங்கிலியை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்தார். இதனால் நெகிழ்ந்துபோன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொன்மகளுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை வழங்கப்படும் என அறிவித்தார். 

Related Stories: