நேபாளம் வழியாக இந்தியாவுக்கு கடத்தல்; 2.5 டன் சீன ஆப்பிள் பறிமுதல்: பீகாரில் 8 பேர் கும்பல் கைது

பீம்நகர்: நேபாளம் வழியாக இந்தியாவுக்கு கடத்த முயன்ற 2.5 சீன ஆப்பிள் பெட்டிகளை எல்லை பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்விவகாரம் தொடர்பாக 8 பேர் கும்பலை கைது செய்துள்ளனர். இந்திய எல்லையான நேபாளம் வழியாக, சீனா போன்ற நாடுகளை சேர்ந்த ஊடுருவல்காரர்கள் அவ்வப்போது புகுந்து, குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எஸ்எஸ்பி மற்றும் பீகார் போலீசின் கூட்டு நடவடிக்கை குழு, இந்திய எல்லையான பீம்நகரில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டது. விர்பூர் மற்றும் பீம்நகரில் சாலையில் உள்ள செங்கல் ஆலைக்கு அருகே, மர்மமான முறையில் சென்ற 3 லாரிகளை கூட்டு நடவடிக்கை குழு மடக்கி பிடித்தது. நேபாள பதிவு எண் கொண்ட அந்த லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் உள்ள பொருட்களை ஆய்வு செய்தனர். மூன்று லாரியிலும் பெட்டி பெட்டியாக ஆப்பிள் பார்சல் இருந்தன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சீன நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிள்கள், நேபாளம் வழியாக இந்தியாவுக்கு கடத்தப்படுகிறது. கைப்பற்றப்பட்ட மூன்று நேபாள நாட்டு லாரிகளைத் தவிர, மூன்று இந்திய லாரிகள், இரண்டு பைக்குகள், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன. தப்ப முயன்ற கடத்தல் கும்பலை சேர்ந்த 8 பேரை கைது செய்துள்ளோம். சுமார் 2.5 டன் சீன ஆப்பிள்கள் பறிமுதல் செய்துள்ளோம். பீம்நகர் சுங்க அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர்.

Related Stories:

>