உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு, ‘கொரோனா தொற்றினால் இறந்தார்’ என இறப்புச் சான்றிதழை வழங்கும்படி  மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும்,கொரோனா தொற்றால் பலியானவர்களின் குடும்பத்துக்கு தேசிய அல்லது மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ.4 லட்சம் இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ``மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. கொரோனாவால் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கும் விவகாரம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இது பற்றி பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும்,’’ என்றார். இதை ஏற்று விசாரணையை 21ம் தேதிக்கு நீதிபதிகள்  ஒத்திவைத்தனர்.

Related Stories: