குறுவை, சம்பா சாகுபடிக்காக காவிரியில் நீர் திறக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: குறுவை, சம்பா பயிர்கள் சாகுபடிக்காக காவிரியில் நீர் திறந்துவிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா என்பது  மாநிலத்தின் நெற்களஞ்சியமாகவும் மற்றும் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் டெல்டாவின் உயிர்நாடியாகவும் இருக்கிறது. விவசாய உற்பத்திக்கு காவிரி நீரை பெருமளவில் சார்ந்து இருக்கிறோம். இந்த ஆண்டும், டெல்டா விவசாயிகள் குருவை மற்றும் சம்பா பயிர்களை சாகுபடி செய்ய ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

நீர்த்தேக்கத்தின் தற்போதைய நிலைகள் மற்றும் தென்மேற்கு பருவமழைக்கான ஐஎம்டியின் கணிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, டெல்டா பாசனத்திற்கான நீர்த்தேக்கத்தை இன்று  திறக்க திட்டமிட்டுள்ளோம். உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த மாதாந்திர அளவின்படி காவிரியில் நீர் திறக்க வேண்டும். தென்மேற்கு பருவமழையிலிருந்து டெல்டா அதிகம் பயனடையவில்லை என்பதால், குருவை பாசனத்திற்கு தொடர்சியான தண்ணீர் வரத்து வேண்டும்  என்பதையும் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கால அட்டவணையின்படி நீர் வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் அதை சார்ந்து இருக்கும் பயிர்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கும். மேலும், அடுத்த மாதம் சம்பா சாகுபடியை தொடங்குவதிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். உச்ச நீதிமன்ற ஆணையின்படி தமிழகத்திற்கு இந்த மாதம் 9.19 டிஎம்சி மற்றும் ஜூலை மாதம் 31.24 டிஎம்சி நீர் வழங்கப்பட வேண்டும். லட்சக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை சாகுபடிக்கு தொடர்ச்சியான நீர்வரத்து அவசியம் என்பதால் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள கால அட்டவணைபடி, தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் பரிந்துரைக்கும் மாதாந்திர கால அட்டவணையின்படி நீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டும். இந்த பிரச்னை லட்சக்கணக்கான விவசாய மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>