தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறையாக டெல்லி பயணம் மோடியை 17ல் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்: நீட் தேர்வு விவகாரம், தடுப்பூசி தட்டுப்பாடு, நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்துகிறார்

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக மு.க.ஸ்டாலின் வருகிற 17ம் தேதி டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது நீட் தேர்வு ரத்து,கொரோனா தடுப்பூசியை கூடுதலாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதும், தலைமை செயலகம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய பைல்களில் கையெழுத்து போட்டார். அதன்படி, கொரோனா நிவாரண தொகையாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், அரசு மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ.3 குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு ஒப்புதல், தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் அரசு காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்புகள் தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, கொரோனா தொற்று பரவல் அதிகளவில் இருந்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு குழுக்கள் அமைத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த துரிதமாக நடவடிக்கைகளை எடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினும் தொற்று பாதித்த பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். சென்னையில், தினசரி சுகாதார துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்தார். கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்றும் ஆய்வு செய்தார். இதன்மூலம் தமிழகத்தில் கடந்த மாதம் அதிகரித்து வந்த கொரோனா, தற்போது  படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தில்  இருந்து, தற்போது 15,759ஆக குறைந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 17ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது. இதற்காக வருகிற 16ம் தேதி (புதன்) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். 17ம் தேதி (வியாழன்) காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்துள்ள நிலையில், நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 18 வயதில் இருந்து வயதானவர்கள் என அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு கொரோனா தடுப்பூசியை தமிழகத்திற்கு குறைந்த அளவே அனுப்பி வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி போட முடியாத நிலை உள்ளது. அதனால், தமிழகத்திற்கு மக்கள் தொகை அடிப்படையில் அதிகளவில் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

அதேபோன்று, கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. அவர்களுக்கு தேவையான மருந்துகளையும் தமிழகத்திற்கு கூடுதலாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். இதுதவிர்த்து, தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அதிக நிதி தேவைப்படுகிறது. அதனால், தமிழகத்திற்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் நிதியுடன், கூடுதல் நிதியும் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அவருடன் சில அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories: