கஞ்சா கடத்தல், வன குற்றங்களை கண்டுபிடிக்க நீலகிரி, கூடலூர் வன கோட்டத்திற்கு இரு மோப்ப நாய்கள்

ஊட்டி : வன குற்றங்கள், கஞ்சா கடத்தலை கண்டறிய சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த இரு மோப்பநாய்கள் நீலகிரி மற்றும் கூடலூர் வன கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் வன விலங்கு வேட்டை மற்றும் கடத்தலை தடுப்பது பெரும் சவாலாக உள்ளது. வன விலங்குகள் உடல் பாகங்களை கடத்தி அவற்றை கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக வேட்டையாடப்படுவது தொடர் கதையாக உள்ளது.

வனவிலங்கு வேட்டை கட்டுப்படுத்தப்பட்டாலும், விலை உயர்ந்த சந்தனம், ஈட்டி ேபான்ற மரங்களை வெட்டி கடத்துவது, வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுவது போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வன குற்றங்களை கண்டறியும் பொருட்டு புலிகள் காப்பகங்கள், வன சரணாலயங்களில் மோப்பநாய்கள் பயன்படுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வன குற்றங்களை கண்டறிவதற்காக பெல்ஜியன் செப்பர்ட்டு வகையை சேர்ந்த ஹாஃபர் என பெயர் சூட்டப்பட்ட மோப்பநாய் கடந்த 2016ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த மோப்பநாய் கடந்த ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தது. இந்த சூழலில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த 6 மாதமான இரு நாய் குட்டிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி வன கோட்டத்திற்கு காளிங்கன் என பெயர் சூட்டப்பட்ட மோப்ப நாயும், கூடலூர் வன கோட்டத்திற்கு அத்தவை என பெயரிடப்பட்ட மோப்பநாயும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோப்ப நாய்களுக்கு வைகை டேம் தமிழ்நாடு வன பயிற்சி மையத்தில் வைத்து 3 மாத கால பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் வாகனங்களில் சோதனையிடுதல், சந்தனம், ஈட்டி மரங்களை வாசனைகளை வைத்து கண்டறிதல், கஞ்சா கண்டறிதல் போன்ற பயிற்சிகளும், வன விலங்குகள் வேட்டை உள்ளிட்ட வன குற்றங்களை கண்டறியும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. நீலகிரி கோட்டத்திற்கான மோப்பநாய் குந்தா வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,`வனங்களில் சூழல்களுக்கு வெளிநாட்டு இனங்களை சேர்ந்த மோப்பநாய்களை விட தமிழகத்தை தாயகமாக கொண்ட நாய்களையே வன குற்றங்களை கண்டறிய பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். இந்த நாய்கள் பயிற்சிகளை சுலபமாக கற்று கொண்டன. மோப்பநாய்கள் இருப்பது வன பாதுகாப்பில் கூடுதல் பலம் சேர்க்கிறது. வன குற்றங்களை கண்டறியவும், விசாரணை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை’ என்றனர். இதேபோல் கோவை வன கோட்டத்திற்கு வளவன் என்ற மோப்பநாயும், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கடுவன் என்ற மோப்பநாயும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: