வாங்கிய கடனை திருப்பி தராத பெண்ணின் 7 வயது மகன் கடத்தல்: வாலிபர் கைது

தர்மபுரி:  தர்மபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அபிநயா (24).  கோவை வடவள்ளியைச் சேர்ந்த கார் டிரைவர் சரவணகுமாரிடம் (24) ஓராண்டுக்கு முன் ராஜசேகர் ₹80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி தராமல் அலைக்கழித்துள்ளார். இந்நிலையில், சரவணகுமார் நேற்று முன்தினம் பணத்தை கேட்க கோவையில் இருந்து தர்மபுரி வந்தார். அப்போது, ராஜசேகர் வீட்டில் இல்லாததால், அபிநயாவிடம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்து அவரது 7 வயது மகனை காரில் கடத்திச் சென்றார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தனிப்படை போலீசார், சரவணகுமார் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அவர் கோவை வடவள்ளியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், வடவள்ளி போலீசாரின் உதவியுடன் சரவணகுமார் வீட்டிற்கு சென்று, அவரை கைது ெசய்தனர். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனை மீட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

அபிநயாவின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன், தர்மபுரி அருகே ஒரு தோட்டத்தில் வேலை செய்துள்ளார். அதன் உரிமையாளர் கோவையைச் சேர்ந்தவர். அவர் தோட்டத்தை பார்க்க அடிக்கடி வந்த காரின் டிரைவராக சரவணகுமார் இருந்துள்ளார். அப்போது, அபிநயாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இன்ஸ்டாகிராமில் நட்பை தொடர்ந்த அவர்கள், நெருங்கி பழகியுள்ளனர். ராஜசேகருடன் திருமணமானபோதும் அபிநயாவுடன் அவருக்கு தொடர்பு நீடித்தது. இதையடுத்து, ராஜசேகருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட சரவணகுமார், அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று, பண உதவியும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில், அவருக்கு பணத்தேவை ஏற்பட்டதால் திருப்பி கேட்டும் தராததால் சிறுவனை கடத்தியது தெரியவந்தது. கடத்தப்பட்ட 10 மணி நேரத்திற்குள் போலீசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததை அனைவரும் பாராட்டினர்.

Related Stories: