மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அறிக்கை ஐஓபி, சென்ட்ரல் வங்கிகளை தனியார் மயமாக்க பரிந்துரை: எதிர்ப்புகளை மீறி அமல்படுத்த தீவிரம்

புதுடெல்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகிய இரு வங்கிகளின் பங்குகளை விற்று தனியார்மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், 2021-22ம் நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்று ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்படி, நடப்பாண்டில் இரு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீடு நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என கூறப்பட்டது.இதற்கான இரு வங்கிகள், காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்யும் பொறுப்பு, மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும், நிதி ஆயோக் அமைப்பிடம் வழங்கப்பட்டது. அந்த அமைப்பு, சமீபத்தில் தனது பரிந்துரையை மத்திய அரசிடம் சமர்ப்்பித்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க்  ஆப் இந்தியா ஆகிய இரு வங்கிகளை தனியார்மயமாக்கும்படியும் பரிந்துரை செய்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

வங்கி பங்குகள் விற்பனை செய்வதற்கான பட்டியலில் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா போன்ற வங்கிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இவற்றில் இருந்து சென்ட்ரல் வங்கி,  ஐஓபி.யை முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் மத்திய பாஜ அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, பல பொதுத்துறை வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக சுருக்கப்பட்டுள்ளது. மேலும், ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் பங்குகள் விற்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில், ஐஓபி, சென்ட்ரல் வங்கிகள் தனியார்மயமாக்கல் குறித்த மத்திய அரசின் முடிவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தாலும், இந்த விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களுக்கு ஓராண்டு பணி பாதுகாப்பு

இந்த இரு வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டாலும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஓராண்டு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என நிதி ஆயோக் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது. அதோடு, வங்கிகள் தனியார் மயமானாலும், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஏற்கனவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.

இன்று அறிவிப்பு வெளியாகுமா?

நிதி ஆயோக் பரிந்துரையைத் தொடர்ந்து மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி ஐஓபி, சென்ட்ரல் வங்கி பங்குகள் விற்பனை தொடர்பாக முடிவு எடுக்கும். இந்த முடிவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்படும். இதன்படி, இன்று பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. எனவே, இன்றைய கூட்டத்திலேயே கூட வங்கிகள் தனியார் மயம் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>