நிருபர்களுக்கு தினசரி பேட்டியளிக்க முடியாததால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மைக்மேனியா தொற்று ஏற்பட்டுள்ளது: ஐட்ரீம்ஸ் மூர்த்தி எம்எல்ஏ தாக்கு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மைக்மேனியா தொற்று ஏற்பட்டுள்ளது, என ராயபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ ஐட்ரீம்ஸ் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ ஐட்ரீம்ம் மூர்த்தி நேற்று நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவதை அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் கேட்பதில்லை. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை, என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து முற்றிலும் தவறானது. தமிழக முதல்வர் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றார். அப்போது சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,738 ஆக இருந்தது. ஒரு மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1664 ஆக குறைந்துள்ளது. இதிலிருந்தே தெரிகிறது முதல்வரின் செயல்பாடு.

கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். முதல்வர் கூறுவதை அரசு அதிகாரிகள் உடனடியாக செய்து வருகின்றனர். மக்களும் முதல்வரின் அறிவுரையை கடைபிடித்து வருகின்றனர். அதன் காரணமாகவே கொரோனா பரவல் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தற்போது 1000 படுக்கைகள் காலியாக உள்ளன. ராயபுரம் தொகுதி மக்கள் தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தகுந்த பாடம் கற்பித்துள்ளனர். தற்போது ஜெயக்குமாருக்கு மைக் மேனியா தொற்று வந்துள்ளது. அதனால்தான் மைக்கை பிடித்து எதாவது பேச வேண்டும் என பேசி வருகிறார். தினசரி மீடியாவை சந்திக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் அவருக்கு இந்த நோய் வந்துள்ளது.

முதல்வர் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் அனைத்து பகுதிகளிலும் மக்கள் தாங்களாகே தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். ஜெயக்குமார் ஒரு ஆறு மாத காலம் அமைதியாக இருந்துவிட்டு, அதன்பின்னர் விமர்சனம் தெரிவிக்கலாம். ராயபுரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று விவரங்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் தினமும் கேட்டறிந்து அதற்கு ஏற்றார்போல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிறப்பு வார்டு தயாராகி வருகிறது. ராயபுரம் முழுவதும் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர், குப்பை பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: