புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரம்- ஊரடங்கு முடிவதற்கு முன் முடிக்க திட்டம்

நாகர்கோவில் : புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்கான 23 குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான குழாய்கள் பதிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், ரூ.250 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக இந்த திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குடிநீர் திட்ட பணியை குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்துகிறது.

இதற்காக தினமும் 360 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்யப்படும். புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையம் வரை உள்ள 32 கிலோ மீட்டர் தூரம் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாநகரின் முக்கிய இடங்கள் என 11 இடங்களில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. இதில் 8 குடிநீர் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 3 நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இது தவிர ஏற்கனவே உள்ள 12 பழைய நீர்த்தேக்க தொட்டிகளும் இந்த திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளன. குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, இந்த குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் செல்வதற்காக குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன.நாகர்கோவில் மாநகரின் பிரதான சாலைகளில் இந்த பணிகள் நடக்கின்றன.

தற்போது  கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வடசேரி திருவனந்தபுரம் சாலை, பாலமோர் ரோட்டில் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது ஊரடங்கு என்பதால்,  வாகன போக்குவரத்து இல்லை. இதனால் பணிகளை வேகமாக முடிக்கும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. 23 குடிநீர் தொட்டிகளுக்கும் 32 கி.மீ. தூரம் குழாய் பதிக்க வேண்டும். 25 கி.மீ. தூர பணிகள் முடிவடைந்துள்ளன.

இன்னும் 7 கி.மீ. தூரம் தான் குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். தற்போது வடசேரி, பீச் ரோடு பகுதியில் பணி நடக்கிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின், பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. இந்த குடிநீர் திட்டத்துக்கான பணிகள் 2020 ஜூன் மாதத்துக்குள் முடிவடையும் என கூறி இருந்தனர். ஆனால் கடந்த 2020 முதல் கொரோனா தாக்குதல் தொடங்கிய பின், பணிகள் நடப்பதில் தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளன. பணியாளர்கள் பற்றாக்குறை, ஊரடங்கு என பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது என அதிகாரிகள் கூறினர்.

Related Stories: