உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று வங்கதேசத்துடன் இன்று இந்தியா பலப்பரீட்சை

தோஹா: இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் பிபா உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டம், கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று இரவு 7.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு கத்தாரில் நடைபெற உள்ளது.  அதற்காக ஆசிய அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள்  2019ல் தொடங்கின.  ஈ பிரிவில்  இந்தியா, கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கேதசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் மோதி வருகின்றன. கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு எந்த ஆட்டமும் நடைபெறவில்லை. இங்கு பரவல் அதிகமாக  இருப்பதால் இந்தியாவில் நடைபெற வேண்டிய 2 ஆட்டங்கள் உட்பட  இந்தியா ஆட வேண்டிய எஞ்சிய 3 ஆட்டங்களும் கத்தாரின் தோஹாவில்  நடக்கிறது.

சில தினங்களுக்கு முன் நடந்த இந்தியா - கத்தார் போட்டியில், கத்தார் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.  அதனால் ஈ பிரிவில் கத்தார் தொடர்ந்து முதலிடத்திலும் இந்தியா 4வது இடத்திலும் தொடர்கின்றன. இந்தியா 6  ஆட்டங்களில் விளையாடி 3ல் டிரா, 3ல் தோல்வி கண்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா, ஜூன் 15ம் தேதி  ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது.  உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில் சுனில் செட்ரி தலைமையிலான இந்திய அணி, 2023 ஆசிய கோப்பை போட்டிக்காவது நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை பெறும் முனைப்புடன் களமிறங்குகின்றனர்.

Related Stories: