சபாநாயகர் பதவியை பெற்ற நிலையில் துணை முதல்வர் பதவியை கேட்டு ரங்கசாமிக்கு பாஜக திடீர் நெருக்கடி: புதுவை அரசியலில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ், பாஜ கட்சிகளுக்கு இடையே இலாகாக்களை பிரிப்பதில் முரண்பாடு நீடிக்கிறது. ஏற்கனவே சபாநாயகர் பதவியை பெற்றுவிட்ட பாஜக, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவியை கேட்டு ரங்கசாமிக்கு தற்போது திடீரென நெருக்கடி கொடுப்பதால் அமைச்சரவை பதவியேற்க காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றிபெற்ற என்ஆர் காங்கிரஸ், பாஜ ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரங்கசாமி உடனே பதவியேற்றார். இருப்பினும் இதுவரை கூட்டணி அமைச்சரவை பதவியேற்கவில்லை.

முக்கிய பதவிகளை பங்கிடுவது தொடர்பாக நீண்ட இழுபறிக்குபின் இரு கட்சிகள் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இருப்பினும் இப்பதவிக்கு தங்கள் கட்சியில் தேர்ந்தெடுக்கப்படுவோரை இறுதி செய்வதிலும், முக்கிய இலாக்காக்களை பிரிப்பதிலும் சி்க்கல் நீடிக்கிறது. குறிப்பாக பாஜ, சபாநாயகர் பதவியை கேட்டு பெற்ற நிலையில் இதற்கு யாரை தேர்வு செய்வது என்பதை இறுதி செய்ய முடியாமல் திணறியது. மேலும் மாநில ஆட்சியில் தனது அதிகாரம் மேலோங்கிட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ள பாஜ முக்கிய இலாக்காக்களை என்ஆர் காங்கிரசிடம் கேட்டுள்ளது.

அதுமட்டுமின்றி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டுமென மீண்டும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதுகுறித்து பேசிய பாஜ மேலிட பார்வையாளரும், எம்பியுமான ராஜீவ் சந்திரசேகரிடம், முதல்வர் என்ற முறையில் நானே அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஓதுக்குவேன், சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பட்டியலை மட்டும் வழங்கிவிட்டு செல்லுமாறு ரங்கசாமி தடாலடியாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதை பாஜக தலைமை ஏற்க மறுத்து தொடர்ந்து ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தான் நினைத்ததை சாதிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

அக்கட்சியின் மேலிட பார்வையாளர் ராஜீவ் சந்திரசேகர், ரங்கசாமியை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது. ஆனால், துணை முதல்வர் பதவியை தர ரங்கசாமி ஒப்புக்கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் இன்று உடன்பாடு எட்டப்பட்டால் அடுத்த வாரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கலாம் என்று தெரிகிறது. இல்லாவிடில் துணை முதல்வர் பதவிக்கு ரங்கசாமி ஒப்புதல் அளிக்கும் வரை அமைச்சரவையை பதவியேற்க விடாமல் இழுத்தடிப்பு செய்யும் முயற்சிகளில் பாஜ திரைமறைவில் ஈடுபடும்.  

ஏற்கனவே அதிகாரமிக்க சபாநாயகர் பதவியை பாஜவுக்கு, ரங்கசாமி தாரை வார்த்துவிட்ட நிலையில் துணை முதல்வர் பதவிையயும் அக்கட்சிக்கு ஒதுக்கினால், மாநில ஆட்சியின் முழு அதிகாரமும் பாஜக வசமாகிவிடும் என்பதால் இவ்விவகாரத்தில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் கடுமையாக கடும் அதிருப்தியில் உள்ளனர். பாஜகவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் நிலைக்கு முதல்வர் ரங்கசாமி இறங்கி போகக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: